Wednesday 27 February 2013

ஆதலால், மீண்டும் பேசுகிறேன்!

நிறைய நண்பர்கள் .....
நிறைய தோழர்கள் .....
என்னிடம் கேட்டார்கள்,
இப்போதெல்லாம் சங்கக் கூட்டங்களில்
ஏன் அதிகம் பேசுவதில்லை என்று.

பேசுவதைக் காட்டிலும் பேச்சைக் கேட்பது சுகமாக இருக்கிறது,
என்பது ஒரு காரணம்.
மற்றொன்று -
நம் முன் இருப்பவர்களிடம் பேச,
நமக்கு புதிதாக ஏதாவது தெரிந்திருக்க வேண்டும்,
அல்லது
முன்னிருப்பவர்கள் ஒன்றுமே தெரியாதவர்கள்
என்ற எண்ணம் வேண்டும்.
இது இரண்டுமே இல்லாத போது,
எதைப் பேசுவது?
எப்படிப் பேசுவது?
ஒரே பொருளை, ஒரே மாதிரி
திரும்பத் திரும்ப எல்லோரும் பேசுவதை
என்னால் ஏற்க முடிவதில்லை.
எனவே தான் சில நேரங்களில் நான் பேசுவதில்லை.

பிறிதொரு காரணமும் உண்டு.
சில பிரச்சனைகளை சில இடங்களில், சில நேரங்களில்
பேசியும் ஒன்றும் ஆகப் போவதில்லை.
அப்படி இருக்கும் போது,
நானும் அதைப் பேசி விட்டேன் என்று
வெறுமனே பதிவு செய்வதில் நாட்டமுமில்லை.
எனவே தான் சில இடங்களில் பேசுவதில்லை.

வெள்ளை மனதோடு கள்ளமில்லாமல்
குழந்தையாய் குதூகலித்துத் திளைத்த நண்பன்
குற்றஞ்சாட்டப்பட்டு கர்நாடகத்திற்கு துரத்தப் பட்டிருக்கிறான்;
அதைப் பேசினேன்; நிறுத்த முடியவில்லை.
விசாரனையை விரைவு படுத்த பேசினேன்;
நகர்த்தக் கூட முடியவில்லை.
இன்னும் இது போன்று நிறைய வலிகளைப் பேச்சாக்கினேன்;
அருமை என்றார்கள்;
அச்சச்சோ என்றார்கள்;
ஆம், விடக்கூடாது என்றார்கள்;
இறுதியில், ஒன்றும் செய்ய முடியவில்லை.
எவராலும் எதுவும் செய்ய முடியாதெனின்,
அவைகளை பேசுவதில் என்ன பயன்!
எனவே தான், பேசுவதில் விருப்பம் இல்லாதிருந்தேன்.

ஆனாலும், பலரும் விரும்புகிறார்கள்;
நான் பேச வேண்டும் என்று.
ஆதலால், மீண்டும் பேசுகிறேன் !